என் வாழ்க்கையின் பெருமை இளையராஜாவை அறிமுகப்படுத்தியதுதான்! - பஞ்சு அருணாச்சலம்


சினிமாவில் நான் எத்தனை சாதனைகள் செய்திருந்தாலும், இளையராஜாவை அறிமுகப்படுத்தியதுதான் என் பெருமை, என்றார் இயக்குநரும் தயாரிப்பாளருமான பஞ்சு அருணாச்சலம்.

அன்னக்கிளி படம் மூலம் இளையராஜாவை இசையமைப்பாளராக அறிமுகப்படுத்தியவர் பஞ்சு அருணாச்சலம்.


இன்று இளையராஜாவின் 71 வது பிறந்த நாள் விழாவில் அவர் பங்கேற்றுப் பேசியதாவது:

நான் ஏராளமான சூப்பர் ஹிட் படங்களை எழுதியுள்ளேன்... இயக்கியுள்ளேன் என்பதோ, நான் ஒரு நல்ல தயாரிப்பாளர் என்பதோ, நான் ஒரு நல்ல வசனகர்த்தா என்பதோ, அல்லது நீண்ட காலம் சினிமாவில் இருந்ததோ எனது பெருமையாக நான் சொல்லமாட்டேன். நான்தான் இளையராஜாவை அறிமுகப்படுத்தினேன் என்பதுதான் எனக்குக் கிடைத்த பெருமை.

ஒரு தாய் தன் மகனைக் கொஞ்சும்போது, அவனை கண்ணே!, மணியே! என்றுதான் கொஞ்சுவாள். அவனை வருங்கால முதல்வரே, என்றெல்லாம் புகழ மாட்டாள். ஆனால் அந்தக் குழந்தை வளர்ந்த பிறகு சாதனைகள் செய்யும். அதுபோலத்தான் ‘அன்னக்கிளி' படத்தில் நான் இளையராஜாவை குழந்தையாகத்தான் பார்த்தேன். அவர்தான் அத்தனை பேரும் அண்ணாந்து பார்க்கும் அளவுக்கு புகழ் பெற்று வளர்ந்துவிட்டார்.

எந்த ஒரு துறையிலும் ஒரு கட்டத்திற்கும் மேல் சலிப்பு வந்துவிடும். ஆனால் ஒரு சிலர் மட்டும்தான் ஆரம்பத்தில் இருந்தது போல இன்னும் சுறுசுறுப்பாக வேலை பார்ப்பார்கள். அந்த பாக்கியத்தை இளையராஜாவுக்குக் கொடுத்த கடவுளுக்கு என் நன்றிகள்,'' என்றார்.


விழாவில் இயக்குனர் பாலா பேசுகையில், "இந்த மேடையில் தனக்கு சமமாக இளையராஜா என்னை அமர வைத்ததே எனக்குக் கிடைத்த கவுரவம். அவரின் ‘இளையராஜாவைக் கேளுங்கள்' என்ற புத்தகத்தில் அவர் எழுதிய விஷயங்களிலேயே அவரின் குணம் வெளிப்பட்டது. அந்தப் புத்தகத்தின் கடைசியில் ‘என் பதில்களால் யாராவது புண்பட்டிருந்தால் என்னை மன்னித்து விடுங்கள்' என்று எழுதியிருப்பார். அதுதான் அவரின் குணம், பண்பு. அவர் நெடுநாட்கள் வாழ அவர் பாதம் தொட்டு வணங்குகிறேன்,'' என்றார்.


பார்த்திபன் பேசுகையில், "இளையராஜாவின் இந்த பிறந்தநாள் விழாவை நடத்த ஆசைப்பட்டு அவரிடம் அனுமதி வாங்க அவரை சந்தித்தேன். ஆனால் அவரோ அனுமதி தராமல் மறுத்துவிட்டார். எனக்கு அதனால் துளியும் வருத்தமில்லை. காரணம் இளையராஜாவை இந்த விழாவிற்கு சம்மதிக்க வைக்கமுடியவில்லையே என்று வருத்தத்தைவிட, அவரை நேரில் சந்தித்துப் பேச எனக்கு ஒரு வாய்ப்புக் கிடைத்ததே என்ற எனக்கு கிடைத்த சந்தோசமே அதிகம். பாலா சொன்னதுபோல் இந்த மேடையில் இசைஞானிக்கு இணையாக என்னையும் அமரவைத்ததே எனக்குக் கிடைத்த சந்தோசம். அவர் வாழும் காலத்தில் நானும் வாழ்ந்து கொண்டிருப்பதே எனக்குக் கிடைத்த பெரும் பேரு,'' என்றார்.

இயக்குநர் சுகா பேசுகையில், "ஒரு இசை உயிரோட்டமாக மக்களிடையே கலந்திருப்பதற்கு மிக முக்கியமானது திறமையோ, உழைப்போ அல்ல. அன்புத் ஒன்றேதான். இசைஞானியின் அன்புதான் அவர் இசையின் வெளிப்பாடு. அவரை வாழ்த்த வயதில்லை என்று பலரும் சொன்னார்கள். ஆனால் அவரை வாழ்த்த வேண்டும். காரணம், அவர் எனக்கு தகப்பன், தாய் மட்டுமல்ல.. ஒரு குழந்தையும் கூட. அந்த வகையில் இந்த 71 வயது குழந்தைக்கு என் வாழ்த்துகள்,'' என்றார்.

RECOMMENDED CONTENT

RECOMMENDED CONTENT

RANDOM AD CONTAINER
Advertise Now!

LATEST TOPICS UPDATES


RANDOM AD CONTAINER
Advertise Now!