அப்புச்சி கிராமம்... கொஞ்சம் வில்லேஜ்.. கொஞ்சம் விஞ்ஞானம்.. நிறைய மனிதாபிமானம்!


avatar

மேலே நாம் போட்டிருக்கிற டைட்டில்தான் அப்புச்சி கிராமம் என்கிற சினிமாவின் மொத்த கதையும்.

முன்பு எழுபதுகளின் இறுதியில் ஸ்கைலாப் என்றொரு சமாச்சாரம் வந்தது நினைவிருக்கிறதா... பலரும் மறந்திருக்கக் கூடும். ஸ்கைலாப் என்ற ஆயுள் தீர்ந்துபோன ராக்கெட் பூமியின் மீது, குறிப்பாக தென்னிந்திய கடலோரம் மோதப் போவதாகவும், அதனால் மனித இனமே இருக்காது என்று செய்திகள் பரவ ஆரம்பித்தன.

அவ்வளவுதான்... அதுவரை நீடித்து வந்த பகைகள் நட்பாகின... கஞ்சர்கள் வள்ளல்களானார்கள்... தோட்டத்தில் மேய்ந்த மாடுகளுக்காக பஞ்சாயத்து கூட்டியவர்கள், பட்டியோடு மாட்டை மேய்ச்சிக்கய்யா என தாராளம் காட்டினர்... கூடாத காதல்கள் கூடின... பெரிசுகள் கண்டு கொள்ளாமல் போக ஆரம்பித்தனர். கிராமம் தோறும் பொதுவிருந்து நடத்தி, ஆட்டுக் கறிக் குழம்பும் கிச்சலிசம்பா சோறும் போட்டனர். அவ்வளவு ஏன், சினிமா கொட்டகைகளில் டிக்கெட்டுக்கு பணம் இல்லேன்னாலும் பரவால்ல போய் பாருய்யா என்றார்கள்... மற்ற மாநிலங்களில் எப்படியோ... தமிழகத்தில் இவற்றையெல்லாம் கண்கூடாகப் பார்க்க முடிந்தது... அனுபவித்த நினைவிருக்கிறது.

ஸ்கைலாப் மோதப் போகும் நாள் வந்தது. அன்று இரவு 2 மணிக்கு மோதும் என்றார்கள். அத்தனை பேரும் கோயில்கள், பள்ளிகளில் கூட்டாக தஞ்சமடைந்தார்கள். ஆனால்... மறுநாள் எந்த சேதாரமும் இல்லாமல் கண்விழித்தார்கள். ஸ்கைலாப் கடலில் விழுந்துவிட்டது. அடடா, பணத்தை, சொத்தை இப்படி அள்ளி இறைச்சிட்டோமே என்ற ஆதங்கத்தோடு வாழ்க்கையை புதிதாக ஆரம்பித்தார்கள்.

மேலே நீங்கள் படித்த கதையில் கடைசி இரண்டு வரிகளைத் தவிர மீதி அனைத்தையும் அப்படியே படமாக்கியிருக்கிறார்களாம் அப்புச்சி கிராமம் படத்தில். படத்தில் ஸ்கைலாபுக்கு பதில் ஒரு விண்கல் 8 நாளில் பூமியைத் தாக்கும் என்றும், கிட்டத்தட்ட உலகமே அழிந்துவிடும் ஒரு செய்தி பரவுகிறது. 8 நாட்களில் சாகப் போகிறவர்கள் எப்படி நடந்து கொள்வார்கள்... மேலே நீங்கள் படித்தது போலத்தான்! ஆனால் விண்கல் மோதி உலகம் அழியவில்லை. ஆனால் இந்த 8 நாட்களில் வாழ்ந்த இனிய வாழ்க்கைதான் அவர்களுக்கு பெரிய அனுபவமாக இருக்கிறது.

அப்புச்சி கிராமத்தின் கதையை இப்படிக் கொண்டு போயிருக்கிறார் இயக்குநர் விஐ ஆனந்த். ஏஆர் முருகதாஸிடம் உதவியாளராக இருந்தவர் ஆனந்த். புதுமுகங்கள் பிரவீன் குமார், அனுஷா நடிக்கிறார்கள். இவர்களுடன் சுவாசிகா, சுஜா, கஞ்சா கருப்பு, சிங்கம்புலி, ஜோமல்லூரி, ஜி.எம்.குமார் நடிக்கிறார்கள். தனது திரைக்கதை மீதிருக்கும் நம்பிக்கை காரணமாக திரைக்கதையை முழுக்கவே செய்தியாளர்களிடம் கூறிவிட்டார் ஆனந்த். அப்புச்சி கிராமம் புது அனுபவத்தைத் தரும் என்கிறார் இயக்குநர். அதற்குத்தானே காத்திருக்கிறார்கள் ரசிகர்கள்!

RECOMMENDED CONTENT

RECOMMENDED CONTENT

RANDOM AD CONTAINER
Advertise Now!

LATEST TOPICS UPDATES


RANDOM AD CONTAINER
Advertise Now!